மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இரு பழங்குடியின பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பயங்கர கலவரத்தை உண்டாக்கியது. இன்னும் அங்கு கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த கலவரத்தில் பெண்களை பலாத்காரம் செய்து நிர்வாணமாக அழைத்து செல்லும் கொடூர சம்பவங்கள் கூட அரங்கேறியது. இந்த வன்முறையால் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இடையில் சற்று கலவரம் ஓய்ந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கடத்தி சென்று கொலை செய்ததால் மீண்டும் கலவரம் வெடித்தது. இந்நிலையில் மணிப்பூரில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் அந்த கலவரத்திற்கும் முதல்வர் பைரன் சிங்கிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்து ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது சித்தரிக்கப்பட்டவை என்று ஆளும் கட்சி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
ஆனால் இதனை கலவரக்காரர்கள் ஏற்க மறுத்த நிலையில் குக்கி அமைப்பினர் சார்பில் இந்த ஆடியோவை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் முதல்வரின் ஆடியோக்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய தடவியல் ஆய்வகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.