ஐரோப்பிய நாடான கிரீசில் சாண்டோரினி தீவின் கடலுக்கு அடியில் கடந்த 03 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட தடவைகள் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
4.5 ரிக்டர் அளவுக்கு மேல் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் சாண்டோரினியின் எரிமலையுடன் தொடர்புடையவை அல்ல என்று அரசு கூறியுள்ள நிலையில், சில நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டோரினி தீவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்க அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், எரிமலை இயக்கத்திற்கான ஏதேனும் அறிகுறி உள்ளதா அல்லது அது இப்பகுதியில் வழக்கமான நிலத்தட்டு அதிர்வு செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.