கருப்பு நிறத்தில் யமுனை ஆறு… பெண்களுடன் சென்று கெஜ்ரிவால் வீட்டை முற்றுகை?… ஸ்வாதி மாலிவால் எம். பி…!!
SeithiSolai Tamil February 04, 2025 05:48 PM

டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் அரியானா அரசு விஷம் கலந்து உள்ளதாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலிடம் விளக்கம் கேட்டது. இதற்கிடையே யமுனை ஆறு மாசடைந்ததற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசுதான் காரணம் என்று டெல்லி மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி-யான ஸ்வாதி மாலிவால் பூர்வாஞ்சல் பகுதி பெண்களுடன் யமுனை ஆற்றில் இருந்து நீரை எடுத்து கெஜ்ரிவால் வீட்டின் முன் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று யமுனை ஆற்றில் இருந்து பெண்கள் நீரை எடுத்து கெஜ்ரிவால் வீட்டை நோக்கி சென்றனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் கொண்டு சென்ற தண்ணீரை ஒரு இடத்தில் கொட்டி இதில் கெஜ்ரிவால் குளிப்பாரா? அல்லது குடிப்பாரா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு முன்னதாக ஸ்வாதி மாலிவால் கூறியதாவது, கேஜ்ரிவாலால் யமுனை ஆறு மாசடைந்து வடிகாலாக மாறிவிட்டது. நான் ஆயிரக்கணக்கான பெண்களுடன் யமுனை ஆற்றிற்கு வந்துள்ளேன். இங்குள்ள நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

துர்நாற்றம் வீசுவதால் எங்களால் நிற்க முடியவில்லை. நாங்கள் இங்கிருந்து நீரை எடுத்து கெஜ்ரிவால் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். யமுனை ஆற்றை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட ரூ. 7500 கோடி எங்கே என்பது குறித்து கேள்வி எழுப்ப உள்ளோம். அவரைப் பார்த்து நாங்கள் யமுனை ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட கருப்பு நிறத்தில் உள்ள நீரில் குளிக்க முடியுமா? வாய்ப்பு இருந்தால் குடிக்க முடியுமா? என்று சவால் விட உள்ளோம் என்றும் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.