தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை உள்பட பெரு நகரங்களில் விமான சேவை உள்ளது. இந்நிலையில், மேலும் இரண்டு நகரங்களில் விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இதற்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்தார்.
விமானங்கள் மூலம் நகரங்களை இணைக்கும் திட்டத்தின் படி, தமிழகத்தில் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சேலத்தில் இருந்து விமான சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், நெய்வேலி மற்றும் வேலூர் விமான நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த இரண்டு விமான நிலையங்களில் லைசென்ஸ்கள் பெறும் பணி நடந்து வருவதால், விரைவில் இந்த இரண்டு நகரங்களில் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ராமநாதபுரம் விமான நிலையம் அமைக்க தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் விமான நிலையமும் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள சில பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏலம் விடவும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
Edited by Mahendran