தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்.. டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப்பதிவு..!
Webdunia Tamil February 04, 2025 07:48 PM

தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறியதாக, டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் போட்டியில் உள்ளன. மூன்று கட்சிகளும் விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்ததுடன், மாறிமாறி இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டன.

இந்த நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் அதிஷி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, 50 முதல் 70 பேருடன், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்திய போதிலும், ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் காவலர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை அடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முதல்வர் அதிஷி மீதும், காவலரை தாக்கியதாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து டெல்லி முதல்வர் அதிஷி கூறும்போது, "பாஜக வேட்பாளர் ரமேஷ் பத்ரியும், அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது டெல்லி காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் இது குறித்து புகார் அளித்தேன். ஆனால், புகார் அளித்த என்மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என தெரிவித்தார்.

மேலும், "தலைமை தேர்தல் அதிகாரி எந்தளவுக்கு தேர்தல் செயல்முறையை கெடுப்பார் என்பதை நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்," என்ற அவர் கூற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.