மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது அசைவம் சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருப்பரங்குன்றம் மலையை காக்க போகிறோம் எனக் கூறி நேற்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தடையை மீறி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வீட்டில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றார். அங்கு போராட்டக்காரர்களை சந்தித்து அவர் தமிழகத்தில் தலிபான் அரசாங்கம் ஆட்சி செய்வதாகவும் ஸ்டாலினின் ஆட்சி என்பது இந்து விரோத தீய ஆட்சியாக இருக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தவில்லை எனவும் என்னுடைய கண்ணோட்டத்தை பொறுத்தவரையில் அங்கு பாஜகவினர்தான் போராட்டம் நடத்தியதாகவும் கூறினார். அதன் பிறகு இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கு மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இனத்தால், மதத்தால், மொழியால் அங்கு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எச். ராஜாவின் ஒரே நோக்கம். நேற்று பாஜகவினர் நடத்திய போராட்டம் என்பது தேவையற்றது. மேலும் திருப்பரங்குன்றம் சென்று விரைவில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று கூறினார்.