Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமா... லேகியம், கஷாயம் போன்றவற்றில் நெய், தேன் போன்றவை சேர்ப்பது தான் காரணம் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே உடல் எடை கூடும் என்பது தவறான தகவல். மிகவும் மேலோட்டமான பார்வை என்றே சொல்லலாம்.
லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப்பொருள்களாகச் சேர்க்கப்படும் என்பது உண்மைதான். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, அவர் குறிப்பிடும்படி, குறிப்பிடும் நாள்களுக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். முறையாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்காது. லேகியம் என்றாலும் 5 கிராம் அளவுதான் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். அப்படி எடுக்கும்போது உடல் எடை அதிகரிக்காது. ஆனால், மருத்துவரை ஒருமுறை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் லேகியம் உள்ளிட்ட மருந்துகளை மாதக் கணக்கில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப்பொருள்களாகச் சேர்க்கப்படும் என்பது உண்மைதான்.இதுவும் எல்லோருக்கும் பொருந்தாது. உணவு விஷயத்தில் சொல்லப்படுகிற அதே அறிவுரை இதற்கும் பொருந்தும். உணவை சாப்பிட்டுவிட்டு, உடலுழைப்பே இல்லாமல் இருந்தால் எப்படி உடல் எடை கூடுமோ, அதே போல, இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போதும் உடல்ரீதியான உழைப்பு அவசியம். மருத்துவர் பரிந்துரையோடு மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது அவரவர் உடல் தன்மைக்கேற்பவே அது வேலை செய்யும். அதைத் தவிர்த்து வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை பார்த்தும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டும் நாள்கணக்கில் எடுக்கும்போதுதான் பிரச்னையே.
சித்த மருந்துகளில் பிரதானமான கஷாயம் எடுத்தால் உடல் எடை அதிகரிக்கும் என்பதும் தவறான தகவலே. கஷாயத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் உடல் எடையைக் குறைக்கும் கஷாயம்கூட இருக்கிறது. ஏற்கெனவே ஒரு நபருக்கு தைராய்டு உள்ளிட்ட வேறு பிரச்னைகள் இருந்து, மருந்துகளும் எடுக்கும்போது நோயின் காரணமாக எடை கூடலாமே தவிர, சித்த மருந்துகளால் எடை வட வாய்ப்பே இல்லை.
ஒரு நபருக்கு தைராய்டு உள்ளிட்ட வேறு பிரச்னைகள் இருந்து, மருந்துகளும் எடுக்கும்போது நோயின் காரணமாக எடை கூடலாமே தவிர, சித்த மருந்துகளால் எடை வட வாய்ப்பே இல்லை.சித்த மருந்துகளில் தேன் சேர்க்கப்படும்போது அதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா, கூடாதா என்பதையும் சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். தேனும், நெய்யும் உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் உணவுகள். எனவே, யாருக்கு எது தேவை என்பதைப் பொறுத்தே மருத்துவர் அவற்றைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.