கல்லூரி மனைவி பாலியல் வழக்கு - குற்றவாளி ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை.!
Seithipunal Tamil February 07, 2025 12:48 AM

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்த உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் கோட்டூர்புரம் போலீசாரிடம் இருந்த சம்பந்தப்பட்ட கோப்புகளை பெற்று விசாரணையை தொடங்கினர்.

அதன் படி முதல்கட்டமாக சிறையில் உள்ள ஞானசேகரன் வீடு மற்றும் சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதில் ஞானசேகரன் சம்பவத்தன்று பயன்படுத்திய உடைமைகள் உள்ளிட்டவற்றை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைப்பற்றினர். 

தொடர்ந்து ஞானசேகரனை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில், ஞானசேகரன் செல்போனில் உள்ள ஆடியோக்கள் குறித்து குரல் மாதிரி தடவியல் சோதனை செய்ய அனுமதிக்க கோரி சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்தது. இதனால் ஞானசேகரனை சிறையில் இருந்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த மனுவை விசாரணை செய்த சைதாப்பேட்டை பெருநகர 9-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு இன்று ஞானசேகரனிடம் குரல் மாதிரி தடவியல் பரிசோதனை செய்ய சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.