திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெறுப்பு அரசியலை முறியடித்து, சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என, அட்டகத்தி இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "மதுரை திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா என, இருவருக்குமே பாத்தியப்பட்ட பகுதிகளுக்கான எல்லைகள், பல வழக்குகளைச் சந்தித்து ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டவை. தற்போது இதில் புதிய குழப்பங்களை உருவாக்க முனைந்து வருகிறது பாரதிய ஜனதா கட்சியும் சங்பரிவார அமைப்புகளும்.
இந்தச் சூழலில் பாரதிய ஜனதாவும், அவர்களின் துணை அமைப்புகளான இந்துத்துவ சங்பரிவார அமைப்புகளும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியிருக்கிறார்கள்.
இரு நம்பிக்கைகளுக்குப் பாத்தியமான மலையை ‘கந்தன் மலை' என்று கோஷமிடுவதின் மூலம், மொத்த மலையையும் இந்துக்களுக்குச் சொந்தம் எனப் பரப்புரைச் செய்து வருகிறார்கள்.
பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடி மத ஒற்றுமைக்கு எதிரான முழக்கங்களை முன் வைத்திருக்கிறார்கள்.
தர்காவை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களும், சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களும் முன்வைத்திருப்பது அதிர்ச்சிக்குரிய கோரிக்கைகளாகும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு, இன்று இந்துத்துவ சக்திகள் நினைத்ததைப்போலவே ராமர் கோயிலை நிறுவியும் விட்ட சமகால வரலாறு கண்ணெதிரே இருக்கும்போது, இத்தகையவர்களின் கூட்டத்தையும் அவர்களது கோரிக்கையையும் எளிதில் கடந்துபோகக் கூடியதல்ல.
இதை வெறும் தேர்தல் அரசியலோடு சுருக்கிப் பார்க்காமல், இந்துத்துவ அரசியல் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மை மீதும், சிறுபான்மை மட்டும் விளிம்புநிலைச் சமூகத்தின் மீதும் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கும் பண்பாட்டு ஆதிக்கம் என்பதை நாம் உணர வேண்டும். இந்தப் பொருண்மையில் சிந்தித்தால் மட்டுமே இந்த அச்சுறுத்தல் அரசியலின் ஆபத்தை நாம் உணர முடியும்.
இந்துத்துவம் தலைதூக்கி இருக்கும் இந்த மோசமான காலகட்டத்தில், இத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வதில் தெளிவான பார்வை இருத்தல் அவசியம். இந்து மதத்திற்குத் தாம் எந்த வகையிலும் எதிரியல்ல என்பதை நிரூபிக்க, அண்மைக் காலங்களில் திமுக அரசு இதுபோன்ற விவாகரங்களில் அலட்சியத் தன்மையோடு ஈடுபடுவதைப் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக, அறநிலையத்துறை என்பது இந்து மத கோயில்களையும் அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க உருவாக்கப்பட்ட துறை என்கிற இடத்திலிருந்து நகர்ந்து, இந்து மதத்தை வளர்த்தெடுக்கவும் பிரசங்கம் செய்யவுமான இடத்தை நோக்கிப் பிற்போக்குத்தனமான முறையில் சென்றுகொண்டிருப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்.
அதற்குப் பதிலாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சகோதரத்துவம், ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பற்ற நிலையிலிருந்து இயங்குதலே போதுமானது.
ஆகையால், அநீதியான கோரிக்கைகளோடு தொடங்கப்பட்டிருக்கும் இந்து பெரும்பான்மைவாத முழக்கத்தைத் தமிழக அரசும் மக்களும், அதற்கேயுரிய கவனத்தோடும், பொறுப்போடும் அணுக வேண்டும்.
இந்த விழிப்புணர்வை வளர்த்தெடுக்கும் யோசனைகளையும், திட்டங்களையும் கொண்டு இந்த வெறுப்பு அரசியலை முறியடித்து, சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.