டெல்லியில் புதிய அதிமுக அலுவலகம்; எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்..!
Seithipunal Tamil February 07, 2025 08:48 AM

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகம் எதிர்வரும் 10-ம் தேதி திறக்கப்பட உள்ளது. 25 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளும் உள்ளடங்கிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தபடி கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இந்த டெல்லி அலுவலகத்தில் நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் அதிமுக எம்பிக்கள் தங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க செல்லும் போதும் இந்த அலுவலகத்தில் தங்குவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சிக்கு கிடைக்கச் செய்தது. இதையடுத்து, டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என எண்ணிய ஜெயலலிதா அவர் உயிருடன் இருந்தபோதே அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.