இதை தெரிஞ்சிக்கோங்க..! ஒருவர் தன் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா ?
Newstm Tamil February 07, 2025 09:48 AM

இந்தியாவைப் பொறுத்தவரைத் தங்கம் மிகவும் முக்கியமான சேமிப்பாகப் கருதப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சீட்டுப் போட்டுத் தங்கத்தைத் தான் சேமித்து வைப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர்.

பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில், சேமிப்பைப் பாதுகாக்கத் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருப்பதால் பொதுமக்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். மேலும், நடப்பு ஆண்டில் தங்கம் என்பது கிட்டதட்ட பங்குச்சந்தைக்கு இணையாக 20.5% லாபத்தை நமக்குக் கொடுத்துள்ளது. இப்படிப் பல நன்மைகள் இருப்பதால் மக்கள் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்து வருகிறார்கள்.

நமது நாட்டில் தற்போதுள்ள சட்டப்படி ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. நகைகளாகவோ, தங்க நாணயங்களாகவோ, தங்கப் பார்களாகவோ நாம் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு இந்தியாவில் சட்டப்பூர்வமாக எந்தவொரு வரம்பும் இல்லை. இருப்பினும், வரி தொடர்பான ஆய்வுகள் நடக்கும் போது வருமான ஆதாரம் இல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் தங்கம் தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன.

CBDT எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் வரை ஆவணம் இல்லாமல் தங்கம் வைத்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் திருமணம் ஆகியிருந்தாலும் திருமணம் ஆகாவிட்டாலும் 100 கிராம் வரை மட்டுமே ஆவணம் இல்லாமல் வைத்திருக்கலாம்.

இவை அனைத்தும் ஆவணங்கள் இல்லாத தங்கத்திற்கான வரம்புகள் மட்டுமே. நீங்கள் முறையான வருமானம் மூலம் தங்கம் வாங்கினீர்கள் என்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் வீட்டில் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை வைத்துக் கொள்ளலாம். அதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை.

இதை நாம் ஒரு உதாரணம் மூலம் எளிமையாகப் புரிந்து கொள்வோம். ஒரு குடும்பத்தில் கணவன்- மனைவி மற்றும் ஒரு திருணமாகாத பெண் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது அவர்கள் (தாய்க்கு 500 கிராம், தந்தைக்கு 100 கிராம், மகளுக்கு 250 கிராம்) மொத்தம் 850 கிராம் தங்கத்தை எந்தவொரு ஆவணமும் இல்லாமல் வைத்திருக்கலாம். அதாவது இந்த 850 கிராம் தங்கத்திற்கான பில் உட்பட எதுவும் தேவைப்படாது.

அதேநேரம் 850 கிராமிற்கு மேல் வைத்திருக்கவே கூடாது என இல்லை. 850 கிராமிற்கு மேல் வைத்திருந்தால் அதை நாம் சட்டப்பூர்வமாகவே சம்பாதித்து வாங்கினோம் என்பதற்கான ஆவணங்களைக் கையில் வைத்திருந்தால் போதும்.

மேலும், நாம் தங்கத்தை விற்கும் போது அதில் கிடைத்த லாபத்திற்கு மூலதன ஆதாய வரி செலுத்தப்பட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் ஒருவர் தங்கத்தை விற்றால், குறுகிய கால மூலதன ஆதாயத்தின்படி அவரது வருமான வரி பிரிவுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். அதேநேரம் 3 ஆண்டுகளுக்கு மேல் என்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரி இருக்கும். அதில் அனைத்து தரப்பினருக்கும் 20 சதவீதம் விதிக்கப்படும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.