இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஹமாஸ் அமைப்பினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இஸ்ரேல் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 07-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தி, ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.
ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், காசாவில் இருந்த பாலஸ்தீனியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கத்ஜ் இன்று கூறும்போது, பாலஸ்தீனியர்கள் நிலம் வழியாக வேறு இடங்களுக்கு வெளியேறி செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள், கடல் மற்றும் வான் வழியாகவும் வெளியேறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்காக திட்டங்களை வகுக்கும்படி இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். காசாவில் இருந்து பெருமளவிலான மக்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதற்கான டிரம்ப்பின் தைரியம் வாய்ந்த திட்டத்திற்கு அவர் வரவேற்பும் தெரிவித்து உள்ளார்.
எனினும், பாலஸ்தீனியர்கள் காசாவுக்கு என்றேனும் ஒரு நாள் திரும்பி வருவது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. காசாவை அமெரிக்கா மறுகட்டமைப்பு செய்ய உள்ளது என டிரம்ப் நேற்று கூறியதுடன், காசாவிலுள்ள மக்கள் உலகின் பிற நாடுகளில் நிரந்தர குடியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.
எனினும், அமெரிக்க அதிகாரிகள் இந்த இடமாற்றம் தற்காலிக அடிப்படையிலானது என்று பின்னர் தெரிவித்தனர். ஆனால், காசாவுக்கு திரும்பி வருவதற்கு இஸ்ரேல் ஒருபோதும் தங்களை அனுமதிக்காது என்று பாலஸ்தீனியர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
குறித்த டிரம்ப்பின் திட்டம், பாலஸ்தீனியர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் பலரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை, சர்வதேச சட்டங்களை மீறி கட்டாயப்படுத்தி ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலானது என உரிமை குழுவினர் கூறியுள்ளனர்.