பொதுவான படிப்பறிவுக்கும் பழங்குடியின மக்களின் படிப்பறிவுக்கும் இடையேயான இடைவேளி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளதாக, நாடாளுமன்றத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான விசிக-வின் எம்பி ரவிக்குமார் எழுப்பிய வினாவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து எம்பி ரவிக்குமாரே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பழங்குடியினர் கல்வி மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தொல் பழங்குடியினர் பட்டியலைச் சேர்ந்த பெண்களின் கல்வியை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு படிப்பு உதவித்தொகைகள், அயல்நாட்டில் சென்று கல்வி கற்பதற்கான உதவித்தொகை , ஃபெல்லோஷிப்புகள் வழங்கப்படுகின்றன” என்று கூறியுள்ள அமைச்சர் மாநில வாரியாகப் பழங்குடியினரின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது என்ற புள்ளி விவரங்களை அளித்துள்ளார்.
இந்தியாவிலேயே பொதுவான படிப்பறிவு நிலைக்கும் பழங்குடியினரின் படிப்பறிவு நிலைக்கும் இடையே அதிகபட்சமான இடைவெளி தமிழ்நாட்டில் தான் உள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவல் அதில் தெரியவந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் பொதுவான படிப்பறிவு நிலைக்கும் ( general literacy) பழங்குடியினரின் படிப்பறிவு நிலைக்கும் ( tribal literacy) இடையே 14% இடைவெளி உள்ளது என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பொதுவான படிப்பறிவு விகிதம் 80.1% ஆகவும் பழங்குடியினரின் படிப்பறிவு விகிதம் 54. 3% ஆகவும் உள்ளது. இரண்டுக்கும் இடையே 25. 8% இடைவெளி இருக்கிறது.
பழங்குடி பெண்களின் படிப்பறிவு நிலையை எடுத்துக் கொண்டால் அதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மிகவும் பின்தங்கியுள்ளது. பொதுவான பெண்களின் படிப்பறிவு 73.4% ஆக உள்ளது. ஆனால், பழங்குடியினப் பெண்களின் படிப்பறிவு விகிதம் 46.8% ஆக இருக்கிறது இரண்டுக்கும் இடையில் 26.6% இடைவெளி உள்ளது.
2023-24 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி நிலவரம் குறித்த UDISE அறிக்கையின் அடிப்படையில் பள்ளியில் சேர்க்கை விகிதம் குறித்த விவரமும் அமைச்சரால் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி ஆகியவற்றில் பழங்குடி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தில் இந்திய சராசரியைவிட தமிழ்நாட்டின் சேர்க்கை சதவீதம் கூடுதலாக உள்ளது.
அதுமட்டுமின்றி எல்லா வகுப்புகளிலும் மாணவர்களைவிட மாணவிகளின் பங்கேற்பு அதிகம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் பழங்குடியினரின் கல்வி வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பயனைக் காட்டுகிறது.
பழங்குடியினரின் படிப்பறிவு விகிதம் எத்தனை சதவீதம் என்பது அடுத்து எடுக்கப்போகும் சென்சஸில்தான் சரியாகத் தெரியவரும். எப்படியிருப்பினும் பொதுக் கல்வி நிலைக்கும் எஸ்சி மக்களின் கல்வி நிலைக்கும் இடையே இடைவெளி இருப்பதுபோல எஸ்டி மக்களின் கல்வி நிலையும் பின் தங்கியே இருக்கும்.
அவர்கள் எளிதாக அணுகும் தொலைவில் பள்ளிகளைத் திறப்பது, உண்டி உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறப்பு படிப்பு உதவித் தொகைத் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்களை சமூகத்தின் மற்ற தரப்பினருக்கு இணையான படிப்பறிவைப் பெறச் செய்யும்.
முதலமைச்சர் அவர்கள் பழங்குடி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க சிறப்புத் திட்டம் ஒன்றை எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்" என்று ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.