இரவில் சரியான தூக்கம் இல்லாததால், பகலில் சோர்வு, ஆர்வமின்மை, பல விதமான உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன் சில குறிப்பிட்ட பழக்கங்களை தினமும் கடைபிடித்து வந்தாலே இரவில் நிம்மதியான, ஆழ்ந்த தூக்கம் வரும்.
இரவில் நிம்மதியான தூக்கத்திற்கான டிப்ஸ் :
சரியான நேரம் :
தினமும் தூங்குவதற்கு ஒரு நேரத்தை வகுத்து வைத்துக் கொள்ளுங்கள். தவறாமல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவதை தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதே போல் காலையில் எழுவதற்கும் ஒரே நேரத்தை வைத்து, அந்த நேரத்தில் எழுந்து விடுங்கள். வார இறுதி நாட்களிலும் இதை பின்பற்றினால் இரவு தூக்கம் பாதிக்கப்படாது.
மொபைல் பார்க்கும் நேரம் :
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மொபைல் போன்கள், லேட்பாட், டேப்லெட், டிவி.,க்கள் போன்ற ப்ளூ ரே வெளிப்படுத்தும் ஸ்கிரீன்களை பார்ப்பதை குறைக்க வேண்டும். இரவில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இந்த எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்த திட்டமிடுங்கள். குறிப்பாக இருட்டில் மொபைல் போன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.
மனதை அமைதியாக்கும் பழக்கங்கள் :
மனதை அமைதியாக்கும் புத்தகம் வாசித்தல், தியானம் அல்லது அமைதியான இசை கேட்பது போன்ற விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தை உங்களால் பெற முடியும்.
இரவு உணவு :
இரவில் காபி, டீ போன்ற உற்சாகம் தரும் பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல் இரவில் கடினமான உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். உற்சாகம் தரும் பானங்களை குடிப்பதாக இருந்தால் குறைந்தபட்சம் தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
சரியான குளிர்ச்சி :
படுக்கை அறையை சரியான குளிர்ச்சி, இருட்டாக வைத்திருங்கள். மிதமான வெப்பநிலையை மற்றும் இருட்டான திரைச்சீலைகள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்க செய்யும்.
உடற்பயிற்சி :
தூங்க செல்வதற்கு முன் எளிய உடற்பயிற்சிகளை செய்வதால் இரவில் நன்றாக தூக்கம் வரும். ஆனால் தூங்குவதற்கு முன் கடினமான ஒர்க் அவுட், அதிக நேர உடற்பயிற்சி, மிக தாமதமான உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வதை தவிர்க்க வேண்டும்.
குறைவான மதுபானம் :
ஆல்கஹால், நிகோடின் போன்ற போதை வஸ்துக்களை இரவில் மிக குறைந்த அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் இரவில் தூக்கத்தை கெடுப்பதுடன், ஆழ்ந்த தூக்கத்தையும் தடுத்து விடும்.
வசதியான படுக்கை
படுக்கை, தலையணை ஆகியவை வசதியாக இருக்கும் படி வைத்துக் கொள்வது நிம்மதியான ஓய்வு மற்றும் தூக்கத்தை கொடுக்கும். உயரம் அதிகமான அல்லது குறைவான அல்லது கடினமான படுக்கை ஆகியவை தூக்கத்தை கெடுத்து விடும்.
மூச்சுப் பயிற்சி :
மூச்சுப் பயிற்சி, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் தசைகள் அமைதி அடையும். படுக்கை அறையை நன்கு நறுமணம் நிறைந்ததாக வைத்திருப்பதும் மனதை அமைதி நிலைக்கு கொண்டு வருவதால் நிம்மதியான தூக்கம் வரும்.