தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சரிவர பணி செய்யாவிடில் அவர்களை பணியில் இருந்து தூக்கி விட்டு வேறொருவர் நியமிக்கப்படுவார் என்று முன்னதாக தலைமை கழகம் அறிவித்திருந்தது.
அதாவது திமுகவில் சமீபத்தில் அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் சரியாக பணி செய்யாத மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கபட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் மதுரா செந்திலை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கே.எஸ் மூர்த்தியை புதிய மாவட்ட செயலாளராக நியமித்தனர்.
இதேபோன்று தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்பிரமணியை நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக பி. தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் திமுகவின் முக்கிய புள்ளியாக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி திடீரென அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தேர்தல் நெருங்கும் நிலையில் சரிவர பணி செய்யாத மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்ற திமுக தலைமை எச்சரித்திருந்த நிலையில் அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.