தெலங்கானாவில் மர்ம நோய் பரவி ஒரே நேரத்தில் 2500 கோழிகள் உயிரிழந்து இருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பர்த்தியின் மாவட்ட கால்நடை மற்றும் விலங்கு பராமரிப்பு அதிகாரி கே. வெங்கடேஷ்வர். இவர் இந்த நோய் பரவல் குறித்து "2500 கோழிகள் இறந்த பிறகு நாங்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டோம். சோதனைக்காக ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன".
"இறப்பு மூன்று நாட்களில் நிகழ்ந்தன---பிப்ரவரி 16ம் தேதி 117, 17 ம் தேதி 300, மீதமுள்ளவை 18 ம் தேதி இறந்தன. அதன் பிறகு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு 19 ம் தேதி ஆய்வகத்திற்கு மாதிரிகளை அனுப்பினோம். இந்த கோழிகள் சிவகேசவுலுவுக்குச் சொந்தமான 5,500 கொள்ளளவு கொண்ட பிரீமியம் ஃபார்மில் இறந்தன," என கூறியுள்ளார். முன்னதாக ஆந்திரப் பிரதேச அரசு பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. மூன்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து கால்நடை பராமரிப்பு கூடுதல் இயக்குநர் டாக்டர் சத்யா குமாரி , "பறவைக் காய்ச்சல் மூன்று மாவட்டங்கள் மற்றும் ஐந்து பண்ணைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் பரவியதால் சுமார் ஒரு லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன'' எனக் கூறியுள்ளார். நேற்று, ஆந்திர விவசாயம், கூட்டுறவு, சந்தைப்படுத்தல் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிஞ்சராபு அட்சன்னாயுடு பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என உறுதியளித்துள்ளார்.