தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையில் கல்வியை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தி மொழியை திணிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழ் ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிகளில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருக்கும். அதே போல் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள ஊர் பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழியில் பொள்ளாச்சி என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை அழித்து விட்டனர். அதன்படி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் இணைந்து ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் கருப்பு பெயிண்ட் மூலம் பொள்ளாச்சி என ஹிந்தியில் எழுதி இருந்ததை அழித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.