சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் ஹோட்டல் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேலே ஏறி அங்கு மிகவும் விசித்திரமாக நடந்து கொண்டார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் வாலிபரை கீழே இறங்கி வருமாறு கூறிய நிலையில் அவரோ கீழே இறங்க மறுத்துவிட்டார். இதனால் அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் வாலிபர் மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். ஆனால் அங்கிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் வாலிபர் சிக்கிக்கொண்டார். சிறிது நேரம் அதிலிருந்து அசையாமல் இருந்த நிலையில் பின்னர் கீழே விழுந்த வாலிபர் திடீரென்று எழுந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசாரை கற்களால் தாக்கினார்.
இதில் சிலர் காயமடைந்த நிலையில் அந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளும் சேதம் அடைந்தது. அந்த வாலிபர் கீழே குதித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இருந்த போதிலும் அந்த வாலிபர் தொடர்ந்து தாக்கினார்.அவரை மிகவும் கடினப்பட்டு பிடித்து போலீசார் பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தேஜ்ராஜ் யாதவ் என்பது தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக சத்தீஸ்கர் வந்துள்ள நிலையில் தன்னுடைய குழந்தையை ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.