தமிழகத்தில் தவெக வின் 2வது ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளார்.
முதலில் நிகழ்ச்சி மேடைக்கு வந்த விஜய், புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்புக்கு எதிராக போராட உறுதியேற்போம் என தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராக நடிகர் விஜய்யின் பரிணாம ஆவணப் படத்தை விழாவில் வெளியிட்டனர்.
விஜய் ரசிகர் மன்றத்தில் தொடங்கி திரைத்துறையில் அரசியல் ரீதியிலாக விஜய் சந்தித்த பிரச்னைகள், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு, மக்கள் நலத்திட்டப் பணிகள், நீட் எதிர்ப்பு உள்ளடங்கிய காட்சிகளை ஆவணப் படமாக உருவாக்கியுள்ளனர். இந்த ஆவணப் படத்தின் காட்சிகளை பட்டிமன்ற பேச்சாளர் ராஜ் மோகன் தொகுத்து வழங்கியுள்ளார்.