நாம் தமிழர் கட்சியின் மகளிர் மாநில பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அந்த வகையில் பொதுச் செயலாளர் பதவி கேட்ட காளியம்மாளுக்கு அதனை சீமான் கொடுக்க மறுத்ததோடு அவரை தட்டி விடப்பட வேண்டிய பிசிரு என்று கூறினார். இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் காளியம்மாள் மற்றும் சீமான் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்த காளியம்மாள் பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் காளியம்மாள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற இருக்கும் நிலையில் இதனை முன்னிட்டு விஜய் முன்னிலையில் அந்த கட்சியில் இணைகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது எங்களுக்கு தெரியும் நாங்கள் ஏற்கனவே வாழ்த்து கூறிவிட்டோம் என்று சீமான் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் எக்ஸ் பக்கத்தை காளியம்மாள் பாலோ செய்துள்ளார். இதன் மூலம் அவர் அந்த கட்சியில் இணைவது உறுதியாகிவிட்டது. மேலும் அதிமுகவில் இருந்து விலகிய மருது அழகுராஜும் தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.