கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உள்துறை மந்திரி அமித்ஷா வருகை புரிந்துள்ளார். அவர் நேற்று கோவைக்கு வருகை புரிந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைத்தார். அதன் பிறகு கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தொகுதி மறு சீரமைப்பால் ஒரு எம்பி சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையில் மட்டும்தான் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும். தென் இந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி கிடைக்குமே தவிர தொகுதிகள் குறைய வாய்ப்பே கிடையாது.
நான் இங்கு உண்மையை கூறியுள்ளதால் கண்டிப்பாக நீங்கள் எனக்கு பதில் அளித்தே ஆக வேண்டும். பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொய்யான தகவல்களை கூறுகிறார்கள். தமிழ்நாட்டிற்கு 5 லட்சம் கோடி நிதி பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் வழங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது வெறும் 1.52 லட்சம் கோடி தான் நிதி வழங்கப்பட்டது என்று கூறினார்.
அதன் பிறகு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. முன்னணி கல்வி நிறுவனங்களில் கூட மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வேங்கை வயல் சம்பவத்தில் 700 நாட்களைக் கடந்த பிறகும் உண்மையான குற்றவாளிகளை கண்டறியவில்லை. கள்ளச்சாராயம் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை கொலை செய்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.