கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் யானைகளை வளர்த்து வரும் பழக்கம் இருக்கையில், தமிழகத்திலும் பிரபல கோவில்களில் யானைகளை பராமரித்து வருகின்றனர். சமீபத்தில் திருச்செந்தூரில் பாகனையும், பாகன் உடன் நின்றிருந்தவரையும் கோவில் யானை மிதித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவில்களில் யானைகளின் பயன்பாட்டை தவிர்ப்பதே இதன் நோக்கம் என்று ரோபோ யானை வழங்கிய பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கூறி உள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் தமிழில், நடிகர் ஷாம் நடித்த 12பி படத்தில் நடித்துள்ளார். தற்போது 'ஹண்டர் 2' என்ற ஆக்சன் திரில்லர் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற உமா மகேஸ்வரா வீரபத்ரேஷ்வரா கோவிலுக்கு `ரோபோ' யானை ஒன்றை நடிகர் சுனில் ஷெட்டி பரிசளித்திருக்கிறார். `பீட்டா' உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகளோடு இணைந்து இதனை செய்திருக்கும் சுனில் ஷெட்டி, கோவில்களில் யானைகளின் பயன்பாட்டை தவிர்ப்பதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளார்.