பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பிலும், 2026 மற்றும் 2027ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் தெலுங்கு மொழிப் பாடத்திற்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆணை பிறப்பித்திருக்கிறார். தாய்மொழியை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.
ஆனால், தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழகத்தில் தமிழை இன்னும் பயிற்று மொழியாகவோ, கட்டாயப்பாடமாகவோ கொண்டு வர முடியவில்லை. தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக்குவதில் தமிழக ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் மிக நீண்டவை. தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்படுவதற்கு எதிராக தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை தடை செய்ய முடியாது என்று கூறிவிட்ட உயர்நீதிமன்றம், 2022&23ஆம் ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
2023&ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,‘‘ உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்வது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது. அதேநேரத்தில் உள்ளூர் மொழியை கற்பிக்க தனியார் பள்ளிகள் மறுப்பது தேச ஒற்றுமைக்கு நல்லதல்ல’‘ என்று கூறியது. எனினும், பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க ஒரு மாதம் மட்டுமே இருந்த நிலையில், அதற்குள்ளாக வழக்கை விசாரித்து முடிக்க முடியாது என்பதால், தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தால், 2023&24ஆம் ஆண்டிலேயே தமிழ்க் கட்டாயப்பாடமாகியிருந்திருக்கும்.
ஆனால், இன்று வரை அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாயப் பாடமாக்கத் தேவையில்லை; அதற்கு பதிலாக தமிழைக் கூடுதல் கட்டாயப் பாடமாக்கினால் போதுமானது; தமிழ்ப் பாடத்திற்கு சிபிஎஸ்இ உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை; தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது மோசடியானது.
தனியார் பள்ளிகள் எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனவோ, அந்தப் பாடத்திட்டத்தின்படி தமிழ்ப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப் பட்டால் தான் மாணவர்கள் தமிழைப் படிப்பார்கள். மாறாக, பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடம் கிடையாது; பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தமிழ்க் கட்டாயம் கிடையாது; எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில், தமிழக அரசுத் தேர்வுத் துறை நடத்தும் தேர்வை பெயரளவில் எழுதினால் போதுமானது என்றால் எவரும் தமிழ் படிக்க மாட்டார்கள்.
தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலுங்கானம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.