இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் அதிக நேரம் இயர் போன் மற்றும் headphone, earbuds போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இதனால் காது கேளாமை பிரச்சனை ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தமிழக பொது சுகாதாரத்துறை தற்போது இயர்போனை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது பற்றி அதில் கூறப்பட்டிருப்பதாவது, நீண்ட நேரமாக இயர் போன் பயன்படுத்துவதால் செவித்திறன் பாதிக்கப்படும் பிரச்சனை இருப்பது அதிகாரப்பூர்வமாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இயர் போனை பயன்படுத்துவதற்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அதன்படி ஒலி குறைவாக இருந்தாலும் அதிக நேரம் இயர் போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒலி சாதனத்தை பயன்படுத்தும் போது அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான ஒலியில் அதிக இரைச்சலை தவிர்க்கக்கூடிய ஹெட்போனை பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் அதிக நேரம் டிவி மற்றும் செல்போன் பார்ப்பதை குறைக்க வேண்டும். இது மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் ஆன்லைனில் விளையாடும் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்களுடைய காது அதிக சத்தத்திற்கு உட்படுவதை தவிர்க்க முடியும்.
இளைஞர்கள் சமூக ஊடகங்களில் செயல்படும் நேரத்தை குறைத்து விட்டு குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்தும்போது 100 டெசிபலுக்கு மிகாமல் ஒலி இருப்பதை விழா ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். காது கேட்கும் திறன் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்து அந்த பிரச்சனையில் இருந்து முழுமையாக மீள முடியும். காது கேட்கும் திறனை முழுமையாக இழந்து விட்டால் அதற்கான சாதனங்கள் மூலம் மீண்டும் செவித்திறனை பெறுவது இயலாத காரியம். மேலும் சிறு வயது முதலே நிரந்தர காது இரைச்சல் என்பது தொடர்ந்தால் மன அழுத்தம் உட்பட பல மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.