திமுகவுக்கு தவெக எப்போதுமே போட்டியாக முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
முன்னதாக நேற்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டிருந்த வீடியோவில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள என் அக்கா, தங்கை, அம்மா என அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்து. உங்களுக்கு சந்தோசம் தானே.. பாதுகாப்பாக இருந்தால் தான சந்தோசத்தை உணர முடியும். பாதுகாப்பு இல்லாத போது, எப்படி சந்தோஷம் இருக்கும்.
நீங்கள் நான் என எல்லாரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போது தானே தெரியுது. எல்லாமே மாறக்கூடியது தான். மாற்றத்திற்கு உரியதுதான். கவலைப்படாதீங்க. 2026ல் நாம் அனைவரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்காக மகளிர் தினத்தில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்” என்று அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து முதல்முறையாக திமுகவினர் பெயரை கூறி விமர்சித்திருந்தார்.
இது குறித்து அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகையில், “அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் திமுகவுக்கு எப்போதும் போட்டியாக முடியாது எனக் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் அரசியல் கட்சியாகவே பார்க்கவில்லை. தாங்கள் எப்போதும் அரசியல் கட்சிகளுடன் மோதிப் பழக்கப்பட்டவர்கள். சிறுபான்மை மக்களை ஏமாற்ற எத்தனை விழாவுக்கு சென்றாலும் ஏமாற்ற முடியாது. நண்பர் யார் எதிரி யார் என அவர்களுக்கு நன்றாக தெரியும்” என ஆவேசமாக கூறினார்.