ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் பாஜகவில் ஊராட்சி மேம்பாட்டு துறை பிரிவு கிழக்கு ஒன்றிய மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியில் இறைச்சி கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இவர் நேற்று அதிகாலை விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல், கிருஷ்ணகுமாரை மடக்கி பிடித்து கத்தியால் வெட்ட முயன்றுள்ளார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போதும், மர்ம நபர் அவரை ஓட ஓட கத்தியால் வெட்டியுள்ளார். கிருஷ்ணகுமாரை வெட்டிக் கொலை செய்த பிறகு, அங்கிருந்து மர்ம நபர் தப்பித்துச் சென்றுள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிருஷ்ணகுமாரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த படுகொலை தொடர்பாக அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.