'எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும்' சசிகாந்துக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை...!
Seithipunal Tamil March 10, 2025 04:48 AM

நேற்று பாஜக  மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி இணையதளத்தில் சசி காந்த் செந்தில் வெளியிட்ட கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார் அண்ணாமலை.இதைப்பற்றி தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவு ஒன்றை  தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது," இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் திரு.சசி காந்த் செந்தில்,அவர்கள் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நேற்று நீங்கள் காணொளியில் கூறிய பொய்யையே மீண்டும் எழுத்து வடிவில் கூறுவதால் அது உண்மையாகி விடாது.

பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை:

நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதுதானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணிக் கட்சி திமுகவுக்கும் வெட்கமில்லை.

இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து திமுகவினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக, ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுகவைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா?" எனது தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இருவரும் மாறி மாறி குறைகூறுவது அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.இதில் இந்த இந்தி பிரச்சனைக்கு ஒரு தீர்வு இல்லையா என மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.