சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக பணியில் சேர்கிறார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த ஜெய்குமார், தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெறாததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ஜெயக்குமார், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுவாமிநாதன், மனுதாரர் தமிழர் என்பதால் பணி வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மின்வாரியத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெறாத சூழலில் எவ்வாறு பணி நீட்டிப்பு செய்ய முடியும்? தமிழ்நாட்டில் அரசு பணியில் சேர்ந்தால் தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அலுவல் மொழியாக தமிழ் உள்ளதால் ஒவ்வொரு ஊழியருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.