ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
Webdunia Tamil March 11, 2025 02:48 AM



பீகார் மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ, ஒருவர் இன்று சட்டப்பேரவையில் ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:

"ஹோலி பண்டிகை வருவதால் இந்துக்களுடன் பிரச்சனை ஏற்படும். இதை தவிர்க்க, முஸ்லிம்கள் அன்று வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும். இஸ்லாமிய மக்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.

நீங்கள் நமாஸ் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. ஆனால், ஒரே ஒரு வெள்ளிக்கிழமை தான் ஹோலி கொண்டாடப்படுகிறது. எனவே, இந்துக்கள் தங்கள் பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் மீது வண்ணம் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது. அவர்களுக்கு இது பிரச்சனையாக இருந்தால், அந்த ஒரு நாளுக்கு மட்டும் வீட்டுக்குள்ளே இருந்து கொள்ளுங்கள். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம்," என்று கூறியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "ஹோலி அன்று முஸ்லிம்கள் பற்றி பாஜகவுக்கு ஏன் கவலை? ஹிந்து, முஸ்லிம்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.