கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில காலமாகவே பாகுபலி என்ற ஒற்றை யானையின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானை பெரும்பாலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தினாலும், இதுவரை மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தை ஏற்படுத்தியதில்லை. இந்நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி, ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை பார்த்து, அவற்றை ஒன்றாக ஒன்றாக எடுத்து ருசி பார்த்தது.
யானையை பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதனை விரட்ட முயன்றாலும், எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பாகுபலி தர்பூசணி பழங்களை சாப்பிட்டு மகிழ்ந்தது. தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர். தொடர்ந்து, இதுபோன்ற யானை நடமாட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.