கர்நாடக மாநிலம் பா.ஜனதா மகளிர் அணியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மஞ்சுளா என்ற 42 வயதுடைய பெண்மணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு யஸ்வந்த்புரத்தை சேர்ந்த இவர், அம்மாநிலத்தில் பா.ஜனதா மகளிர் அணியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். அத்துடன் இவர் கட்சி பணியில் திறமையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கணவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.காலமாகியுள்ளார். இதன்காரணமாக கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மதியம் தனியாக வீட்டில் இருந்த மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து யஸ்வந்த்புரம் போலீசாருக்கு தகவல் கிடைக்க, விரைந்து வந்த போலீசார் மஞ்சுளாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மஞ்சுளா கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் மஞ்சுளா குறிப்பிட்டுள்ளதாவது; 'வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன்.
ஆனால், நிம்மதி இல்லை. கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இழந்து தவிக்கிறேன் எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனது தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்துள்ளார். குறித்த கடித்தை கைப்பற்றிய போலீசார் அதை தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளதோடு, இதுகுறித்த மேலதிக விசாரணையை போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனா்.