கடந்த ஆண்டு செப்டம்பரில், டாடா ஸ்டீல் நிறுவனம் பிரிட்டனில் மிகப்பெரிய எஃகு ஆலை அமைப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, போர்ட் டால்போட் ஆலையை மூடியது. இந்த நடவடிக்கையால் 2,800 ஊழியர்கள் வேலை இழந்தார்கள். சர்ச்சைக்குள்ளான இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டன.
இந்நிலையில், டாடா ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட 900 ஊழியர்களுக்கு ஹாலிவுட் நட்சத்திரம் மைக்கேல் ஷீன் எதிர்பாராத உதவியை அறிவித்துள்ளார். மொத்தம் ரூ.8.7 கோடி (தோராயமாக ஒரு மில்லியன் டாலர்) நிதியுதவியை அவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அமேடியஸ், ட்விலைட், எ வெரி ராயல் ஸ்கேண்டல் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நட்சத்திரம் மைக்கேல் ஷீன். 900 முன்னாள் டாடா ஊழியர்களின் ரூ.8.7 கோடி கடனை அடைத்துள்ளார். பிபிசி அறிக்கையின்படி, ஷீன் தனது சொந்த ஊரான சவுத் வேல்ஸ் மக்களுக்கு நன்கொடை வழங்கியதில் இருந்து இவ்வாறு நிதியுதவிகள் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
ஷீன் ஒரு காசோலையில் கையெழுத்திட்டு தொகையை வழங்கியுள்ளார். நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கு உதவ தனது சொந்த ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்தார். நிறுவனங்களால் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்களுக்கு உதவி செய்வதே அவரது முயற்சியின் நோக்கமாகும்.