கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தம்பதி, தங்களது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள ஹப்சிகுடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் 46 வயதான சந்திரசேகர ரெட்டி, இவரது மனைவி கவிதா 36 வயது. குறித்த தம்பதிக்கு, ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த மகளும், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மகனும் இருந்தனர்.
சந்திரசேகர ரெட்டி, தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அத்துடன், கடனை செலுத்த முடியாமல் தவித்த அவர், மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்திரசேகர ரெட்டியை அவரது உறவினர் ஒருவர் மொபைல் போனில் நேற்று முன்தினம் இரவு பலமுறை அழைத்துள்ளார். அவர் எடுக்கவில்லை. இதனால் குறித்த உறவினர் சந்திரசேகர ரெட்டி வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அங்கே உடனே வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, படுக்கை அறையில், இரு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளனர். அத்துடன், மற்றொரு அறையில் சந்திரசேகர ரெட்டியும் அவரது மனைவி கவிதாவும் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளனர். உடனடியாக நான்கு பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த தம்பதிகள் மகள் மற்றும் மகனின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிக கடன் தொல்லை மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் தற்கொலை செய்வதாக சந்திரசேகர ரெட்டி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.