கோட்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போலீசாரின் மனைவி டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது ஹோலி பண்டிகையையொட்டி பலர் காத்திருப்பு டிக்கெட் உடன் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி சோகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலில் அரசு ரயில்வே காவலர் தனது மனைவியுடன் பயணித்து வந்தார். அப்போது ஸ்லீப்பர் டிக்கெட்டில் இருந்த அவர் தனது மனைவியை ஏசி பெட்டியில் பயணிக்க வைத்தார். இதனைக் கண்ட ரயில்வே டிக்கெட் ஆய்வாளர் அவரை ஸ்லீப்பர் டிக்கெட்டுக்கு மாற சொன்னார். இதனால் அரசு ரயில்வே காவலருக்கும், ரயில்வே டிக்கெட் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து தகராறு முற்றிய நிலையில் அவரது மனைவிக்கு ரூ 530 அபராதம் விதிக்கப்பட்டு ஸ்லீப்பர் பெட்டிக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் வேகமாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து தலைமை டிக்கெட் ஆய்வாளர் ராகேஷ் குமார் பிப்பால் மேல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அவர் தனது புகாரில் ஏசி பெட்டியில் பெண் பயணிக்க தவறான முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ரயில்வே பிரிவு அதிகாரிகள் விசாரணை முடிவில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் ரயில்வே விதிகளை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு என சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பலரும் பதிவு செய்து வருகின்றனர்.