குஜராத் மாநிலத்தில் வடோதரா நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் இருந்து பொதுமக்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் மது விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கிய காரில் வெளிநாட்டு மதுபானங்களை கடத்தி வந்தனர்.
இந்நிலையில் கார் விபத்தில் சிக்கிய உடன் அருகில் இருந்தவர்கள் காரில் இருந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்தக் காட்சிகள் ஒரு ஸ்கூட்டியில் பயணம் செய்த பெண்களால் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மதுகடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.