சபரிமலையில் குவியும் பக்தர்கள்... பங்குனி மாத பூஜைக்காக இன்று நடை திறப்பு!
Dinamaalai March 14, 2025 02:48 PM

இன்று மாலை 5 மணிக்கு பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலைக்கு வரும் பக்தர்கள்,  இன்று மாலை 18ம் படி ஏறியதும் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இன்று மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி இன்று  மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து நாளை மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை முதல் மார்ச் 19ம் தேதி வரை தினமும் பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் மார்ச் 19ம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல திருவிதாங்கூர் தேவஸ்தானம் வசதிகளை செய்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு வந்த பின், வழக்கமான மேம்பாலம் வழியாக செல்லாமல் கொடிமரத்தில் இருந்து நேரடியாக கோவில் நடை பகுதிக்கு இரண்டு வரிசையாக செல்ல வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதல் நேரம் தரிசனம் கிடைக்கும். வரும் காலங்களிலும் இந்த நடைமுறையை தொடர தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.