கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மணி என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மணி வியாபாரத்திற்காக தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டார். அவருடைய இரண்டு மகன்களும் வேலை சம்பந்தமாக வெளியே சென்று விட்டனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதியம் திடீரென ஜன்னல் வழியே புகை வந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மணிக்கு தகவலை தெரிவித்தனர்.
இதைக் கேட்டவுடன் மணி பதட்டத்துடன் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது வீட்டினுள் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகி சேதமானது. இந்த தகவல் ஓசூர் டவுன் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணியின் மனைவி காலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு சென்றுள்ளார். அந்த விளக்கு காற்றில் கீழே விழுந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.