தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று முழுமையான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இதைத்தொடர்ந்து நாளை விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் பல எதிர்பார்ப்புகள் என்பது இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் விவசாயிகள் பட்ஜெட் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதாவது தற்போது பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் அது உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்தவைகளில் நிறைவேற்றப்படாமல் இருப்பது பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உயர்வு மட்டுமின்றி இன்னும் பல பயனாளிகள் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, எல்பிஜி கேஸ் சிலிண்டரில் மானியமாக 100 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்த நிலையில் இதுவரை அந்த திட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதால் பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதே போன்று சிறு குறுதொழில்களுக்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதால் அதற்கான இடங்களை தேர்வு செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு சிறுகுறு தொழில் தொடங்குவதற்கான மானிய அதிகரிப்பு குறித்த அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பள்ளி கல்வித்துறை மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் மத்திய அரசு 2000 கோடி நிதியை விடுவிக்காததால் பள்ளிக்கல்வித்துறை பட்ஜெட் மீது அதிகரிப்பு இருக்கிறது. இதேபோன்று உயர்கல்வித்துறைக்கும் பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்த நிலையில் அது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு ஊழியர்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவதால் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.