மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் தனது கணவரோடு வசித்து வந்தவர் மைதிலி (35). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள். இவர்கள் 29வது மாடியில் வசித்து வந்தனர். மைதிலியின் கணவர் ஆசிஷ் கான்டிராக்டராக இருக்கிறார். மைதிலி சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இதற்காக மருந்து எடுத்து வந்தார். சமீபத்தில் மருந்து காலியாகிவிட்டது. அதன் பிறகு மருந்து வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தபோது அதனை மைதிலி சரியாக சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மைதிலியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இது குறித்து பக்கத்து வீட்டில் சொன்னால் பிரச்னையாகிவிடும் என்று கருதி ஆசிஷ் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இன்று காலையில் ஆசிஷ் வீட்டில் இருந்தபோது திடீரென மைதிலி தனது கணவரை படுக்கையில் அறையில் இருந்து வெளியில் தள்ளி பூட்டிக்கொண்டார்.
உள்ளே மைதிலியும், அவரின் மகளும் இருந்தது. மைதிலியின் மகள் உதவி கேட்டு சத்தம் போட்டு கத்தினார். ஆசிஷ் வெளியில் இருந்து கதவை திறக்கும்படி கூறி கதவை தட்டினார். ஆனால் ஒரு கட்டத்தில் படுக்கை அறைக்குள் இருந்து சத்தம் வருவது நின்றுவிட்டது. இதனால் சந்தேகமடைந்து கீழே பார்த்தபோது மக்கள் கூட்டமாக இருந்தனர். கீழே சென்று பார்த்தபோது தாயும், மகளும் கீழே விழுந்து இறந்து கிடந்தனர். மைதிலி தனது மகளை கீழே தூக்கிப்போட்டுவிட்டு தானும் கீழே குதித்திருந்தார். வீட்டில் ஜன்னல் கதவு திறந்திருந்தது. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மைதிலியும், ஆசிஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மைதிலி மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். ஆனால் ஆசிஷ் பஞ்சாப்பைச் சேர்ந்தவர் ஆவார். இம்மரணம் குறித்து மைதிலியின் உறவினர்கள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.