FLASH: ஏப்-1 முதல் கொடைக்கானல், ஊட்டி சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!
SeithiSolai Tamil March 14, 2025 09:48 PM

கொடைக்கானல் ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த ஆய்வுகள் முடிந்து அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆகும். எனவே கோடை விடுமுறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, இனிவரும் கோடை காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு ஊட்டி கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அந்த வகையில் இ-பாஸ் நடைமுறையின் அடிப்படையில் ஊட்டிக்கு வார நாட்களில் தினமும் 6000 சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தினமும் 8000 வாகனங்களை அனுமதிக்கலாம்.

இதேபோல கொடைக்கானலில் தினமும் 4000 வாகனங்களை அனுமதிக்கலாம். சனி, ஞாயிறு நாட்களில் தினமும் 6000 வாகனங்களை அனுமதிக்கலாம். உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊட்டி செல்லும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும்தான் வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

இந்த புதிய கட்டுப்பாடுகளை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 25-ஆம் தேதி தாக்கல் செய்வது அவசியம். புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் போலீசாரை பணியமற்ற வேண்டும். கொடைக்கானல், ஊட்டி செல்லும் மின்சார வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.