Sivaji Ganesan: சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க துவங்கி பல வருடங்கள் நாடகங்களில் நடிப்பு பயிற்சி எடுத்து பாராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கியவர் சிவாஜி கணேசன். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை வாங்கினார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார். நல்ல கதை, குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள், உறவுகளின் முக்கியத்துவங்கள், அதில் உள்ள சிக்கல்கள் என பெண்களுக்கு பிடிக்கும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து அதிகம் நடித்தார். சிவாஜி ஏற்காத வேஷங்களே இல்லை என சொல்லுமளவுக்கு பல வேடங்களில் நடித்து நடிகர் திலகமாக மாறினார்.
இந்நிலையில், இசைஞானி இளையராஜா நடிகர் திலகத்தை கடைசியாக சந்தித்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்த நேரம் அது. நடிகர் திலகம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தார். அவரை பார்க்க சென்றபோது பவதாரிணியையும் என்னுடன் அழைத்து சென்றிருந்தேன்.
பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்த விஷயத்தை சொன்னதும் ‘நல்லாரு’ என வாழ்த்தினார். சிவாஜியின் ராஜ நடையை பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறேன். அப்படிப்பட்ட கலைஞர் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருப்பதை பார்த்து என் மனம் தாங்கவில்லை. மெலிந்திருந்த அவரின் உடலை பார்த்தவுடனே என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட துவங்கிவிட்டது. அதை சிவாஜியும் பார்த்துவிட்டார்.
‘என்னடா.. அண்ணன் இப்படி ஆயிடேன்னு பாக்குறியா.. சாப்பிடவே பிடிக்கல...’ என சொன்னார். அதன்பின் சில மணி நேரம் அங்கே இருந்தும் என்னால் இயல்பாக பேச முடியவில்லை. நான் அவருக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக அவர் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் என்னென்னவோ சொன்னார். ஆனால், என்னால் விடுபட முடியவில்லை. ஒரு மகத்தான கலைஞனை அப்படி பார்க்க முடியாமல் ‘ரெஸ்ட் எடுத்துக்கோங்க. மறுபடி வந்து பாக்குறேன்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால், அதுதான் அவருடனான எனது கடைசி சந்திப்பு என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை’ என சொல்லியிருக்கிறார் இளையராஜா.
இளையாஜாவும் சிவாஜி கணேசனும் முதன் முதலில் சந்தித்துகொண்டது தீபம் படம் உருவானபோதுதான். அதுதான் சிவாஜிக்கு இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம். அதன்பின் சிவாஜியுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு இளையராஜாவுக்கு கிடைத்தது. பிரசாத் ஸ்டுடியோவில் பல நாட்கள் மதிய உணவை இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்களாம்.
சிவாஜி கணேசனின் மறைவு பலரையும் தடுமாற வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்!.