மூடநம்பிக்கையால் கொடூரம்... 6 மாத பச்சிளம் குழந்தையை எரியும் தீயில் போட்ட மந்திரவாதி!
Dinamaalai March 16, 2025 01:48 AM

தொழில்நுட்ப வளர்ச்சி இத்தனை வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் மூட நம்பிக்கை பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் பல நேரங்களில் விபரீதமாகவும் முடிந்து விடுகின்றன. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் கோலர்ஸ் ராம் நகர் பகுதியில் வசித்து வந்தவர்  ஆதேஷ்வர்மா. இவருடைய மனைவி , ஆறுமாத ஆண்குழந்தை ஒன்றும் இருந்தது. அந்த ஆண் குழந்தையின் பெயர் மயங்க். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் தங்களது காலனிக்கு அருகில் உள்ள மாந்திரீகவாதியின் வீட்டிற்கு குழந்தைக்கு பூஜை செய்வதாக அழைத்துச் சென்றனர்.


அங்கு பூசாரி குழந்தையை நெருப்பிலிட்டு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனே குழந்தை கதறி  அழ பதற்றத்தில் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களிடம் உண்மையை கூறாமல் குழந்தையின் முகத்தில் சூடான தண்ணீர் விழுந்ததாக பொய் கூறினார். ஆனால் மருத்துவர்கள் குழந்தைக்கு ஏற்பட்ட காயத்தை வைத்து சந்தேகத்தில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் குழந்தையை  மாந்திரீகவாதியிடம் அழைத்துச் சென்றதும் அங்கு பூஜை என்ற பெயரில் அவர் செய்த செயலால் குழந்தைக்கு படுகாயம் அடைந்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மாந்திரீகவாதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாந்திரீகவாதி செய்த பூஜையால் குழந்தைக்கு அதிக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் குழந்தைக்கு  பார்வை பறிபோய் விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூஜை என்ற பெயரில் மாந்திரீகவாதி செய்தது என்ன? என்பது விசாரணை முடிவிலே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.