ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டி ஆவுலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசியாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி வட்டம், மொட்டனூத்து ஊராட்சியில் உள்ள கொப்பையம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆவுலம்மன் ஆசியுடன் ஆரிய குல ரங்க வம்சத்தாருக்கு பாத்தியப்பட்ட கோவிலில் நூதன விமான மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு முன்னதாக, சாமி பெட்டி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்து, அதனை தொடர்ந்து விக்னேஸ்வரர் பூஜை ,எஜமான சங்கல்பம், வாஸ்து பூஜை ,முளைப்பாரி இடுதல், கணபதி ஹோமம் ,லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டு, விமான கலசமும், அம்பாள் பெட்டியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை யாக சாலையில் கோபூஜை, கன்னியா பூஜை, துர்கா ஹோமம் ,நவகிரக ஹோமம் உள்ளிட்ட சாஸ்திரங்கள் நடைபெற்று ,பூர்ணாகுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்க் குடங்கள் புறப்பாடாகி ,விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து மூலஸ்தான பெட்டி கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு மகா அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னிவாடி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில், பெரிய தனம் செல்வம் மற்றும் பெருமாள் கோவில் பூசாரி பெருமாள் என்ற ராஜா, கண்கலையம் முதன்மை ராமசாமி ஆகியோர் முன்னிலையில், ரங்க வம்சத்து பூசாரி வகையறா பூசாரி வேல்முருகன் உள்ளிட்ட பெரியவர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.