நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு; ரூ.3,796 கோடியை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு..
Seithipunal Tamil March 16, 2025 02:48 PM

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் முறைகேடு செய்வதற்காக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக பணியாற்றியவர்களுக்கு, 3,796 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005-இல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இந்நிலையில்,தமிழகத்தில், 2008 - 09 ஆம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அதாவது, பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை உருவாக்குவதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.

இந்த திட்டத்தின் மூலம் தற்போது, நாடு முழுதும், 740 மாவட்டங்களில், 13.42 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். இத்திட்டத்தால், கிராமப்புறங்களின் வாழ்வாதாரம் உயர்ந்தாலும், வேளாண் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்தவகையில், நடவு, களையெடுத்தல் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு பெண்கள் வருவதில்லை என்றும், அவ்வாறு வந்தாலும் இரட்டிப்பு கூலி கேட்பதாக, விவசாய சங்கங்கள் குற்றஞ் சாட்டி வருகின்றன.

அத்துடன், கடந்த 2023 - 24ஆம் நிதியாண்டில், தமிழகத்தில் 40.87 கோடி மனித சக்தி நாட்கள் அடிப்படையில், 13,392 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், புகார்கள் அடிப்படையில் அவ்வப்போது நிதி நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னரே மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த 2024 நவம்பர் 27-ஆம் தேதி முதல், இந்தாண்டு மார்ச் 11 வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு, 2,839 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, 957 கோடி ரூபாய் பொருட் கூறுக்கான நிதி என மொத்தம் 3,796 கோடி ரூபாயை, மத்திய அரசு மீண்டும் விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதியை விடுவிக்க, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதற்கு பதில் கூறாமல், தாமதப்படுத்தி வருவதாக தமிழக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு நிதி விடுவிக்காததற்கு, தமிழக அரசு தான் காரணம் என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது: ''இத்திட்டத்தால் கிராம மக்கள் பயனடைந்தாலும், கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், எங்குமே குளம், குட்டை போன்றவை புதிதாக வெட்டப்படவில்லை. ஏற்கனவே உள்ள குளங்களை துார்வாரும் பணி கூட பெயரளவில் தான் நடக்கின்றன. ஒரு கிணறு கூட உருவாக்கப்படவில்லை.'' என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பணியாளர்கள் வருகின்றனர்; கையெழுத்து போடுகின்றனர்; சில பணிகள் செய்து புகைப்படம் எடுத்தவுடன், 12:00 மணியளவில் மீண்டும் கையெழுத்து போட்டு விட்டு கிளம்பி விடுகின்றனர். இதற்காக நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களும், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.'' என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து அரச அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகையில், ''அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வெளி மாவட்டங்களில் இருக்கும் நபர்கள் பெயரில் அட்டை வழங்கி, அப்பணத்தை பெற்று வருகின்றனர். மேலும், வேலை செய்யாமல் பணம் பெறும் மக்களிடம், குறிப்பிட்ட தொகையை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். தமிழக அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கும் கமிஷன் வழங்கப்படுகிறது.'' என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், மேலும், 100 நாட்கள் வேலை நடந்தால், ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவருக்கும், 10,000 ரூபாய் வரை கமிஷனாக மக்கள் நலப் பணியாளர்கள் வழங்குகின்றனர். இது குறித்த புகார்கள், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மத்திய அரசுக்கு சென்றுள்ளன.'' என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

இதன் காரணமாக ''இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நலப் பணியாளர்கள் இல்லாமல், ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். மறு ஆய்வுக்கு பின், நிதி விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.''என்று அரச அதிகாரிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.