2025ல் 61 படங்கள் ரிலீஸ்!.. 3 படங்கள் மட்டுமே ஹிட்!.. 100 கோடியை தாண்டிய டிராகன்!...
CineReporters Tamil March 17, 2025 04:48 PM

Dragon: கோடிகளை கொட்டியே திரைப்படங்களை எடுக்கிறார்கள். மிகவும் மினிமம் பட்ஜெட்டில் எடுத்தால் கூட 10 கோடி இல்லாமல் படம் எடுக்க முடியாது. முன்பு போல் தியேட்டர் வசூல் மட்டும் இல்லாமல் இப்போது வியாபார எல்லை அதிகரித்துவிட்டது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டில் (ஒடிடி) உரிமை, ஹிந்தி ரிமேக் உரிமை என பல வகைகளிலும் தயாரிப்பாளருக்கு பணம் கிடைக்கிறது.

எனவேதான் லாபம் வந்துவிடும் என நம்பி திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். சில படங்கள் தியேட்டரில் வரவேற்பு இல்லாமல் 3 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆன பின் வரவேற்பை பெறும். சில படங்கள் புரமோஷன் செய்ய பணமில்லாமல் மக்களிடம் ரீச் ஆகாமல் போய்விடும். இதனால் சில நல்ல படங்கள் கூட தோல்வி அடைந்துவிடும்.


ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு புரமோஷனே தேவையில்லை. ஏனெனில், அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். எனவே, ரிலீஸான முதல்நாளே படங்கள் வசூலை அள்ளிவிடும். ஆனால், சின்ன படங்களுக்கு புரமோஷன் தேவைப்படும். இல்லையெனில் படம் நன்றாக இருக்கிறது என பரவாலாக பேசப்பட்டு ரசிகர்கள் தியேட்டருக்கு போய் பார்க்கும் வரை அந்த படம் தியேட்டரில் இருக்க வேண்டும். இது எல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே படம் ஓடும்.

கடந்த வெள்ளிக்கிழமை 8 புதிய படங்கள் வெளியானது. இதில் மர்மர், பெரிசு ஆகிய 2 படங்களுக்கு மட்டுமே கொஞ்சம் கூட்டமிருக்கிறது. மற்ற படங்கள் தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டை பொறுத்தவரை ஜனவரி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 61 தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது.


இதில், மதகஜராஜா, குடும்பஸ்தன் மற்றும் டிராகன் ஆகிய 3 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், டிராகன் படம் 100 கோடி வசூலை தாண்டி மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறியிருக்கிறது. இந்த 3 படங்களுமே மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும், மதகஜராஜா 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாகும்.

வருகிற ஏப்ரல் முதல் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. இதில், அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி அடுத்து ரஜினியின் கூலி, கமலின் தக் லைப், விஜயின் ஜனரஞ்சகன் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. இதில் எந்த படங்களெல்லாம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.