தெற்கு ரெயில்வேயில் கலியாகவுள்ள உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான தேர்வை எழுதும் தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே தேர்வு வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது:- "ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2-ம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தத் தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத சூழலில் அருகில் உள்ள மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் ரெயில்வே பாதுகாப்புப் படை காவலர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்கும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு ஒரே நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் 19, 20 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறவுள்ள உதவி லோகோ பைலட் தேர்வில் பங்கேற்போருக்கு இடவசதியை பொறுத்து தேர்வு மையம் ஒதுக்கப்படுகிறது.
இதற்கு முன்பு இதுபோன்று இரண்டு கட்டங்களாக தேர்வு நடந்த போதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின தேர்வர்களுக்கு ரெயிலில் இலவசமாக பயணிப்பதற்கான சலுகை வழங்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.