கேஸ் கசிவால் தீப்பிடித்து 4 பேர் உயிரிழப்பு! சென்னையில் சோகம்
Top Tamil News March 17, 2025 04:48 PM

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் கேஸ் கசிவால் தீப்பிடித்து 4 பேர் படுகாயத்துடன் கேஎம்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராணி என்பவரும் தற்போது உயிரிழந்தார்.

சென்னை கோவிலம்பாக்கம், காந்திநகர், 15-வது தெருவில் வசித்து வருபவர் முனுசாமி(75), இவர் கடந்த 5 ஆம் தேதி இவரது குடும்பத்தினர் 5 பேருடன் வீட்டில் உறங்கி கொண்டிருருந்த போது கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவிய நிலையில், இதனை அறியாமல் ரகு(48), என்பவர் மின்சார ஸ்விட்ச்சை ஆன் செய்து விட்டு வெளியில் சென்றதாகவும், அப்போது சிறிது நேரத்தில் அறை முழுவதும் திடீரென தீப்பற்றி எரிய துவங்கி, பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த முனுசாமி, ராணி(70), சாந்தி(45), ஹரிகுமார்(எ)அஜித்குமார்(27) ஆகிய நான்கு பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு அலறி கத்தியுள்ளனர். 

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின் மேல் சிகிச்சைகாக கே.எம்.சி.அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் மேடவாக்கம் போலீசார் விசாரணை செய்த நிலையில், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பின்னர், தடயவியல் துறை உதவி இயக்குநர் ஜெயந்தி விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து சென்றார். விபத்து நடந்த வீட்டில் மாதிரிகளை சேகரித்து, வீட்டில் இருந்து ரெகுலேட்டர் டியூப், மற்றும் பால் குண்டா, எரிந்த மாதிரி கண்ணாடி துண்டுகளை சேகரித்து எடுத்து சென்றார். 


இதன் விரிவான அறிக்கையை மேடவாக்கம் போலீசாரிடம் அளிக்கப்பட்டு அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட வீடு இருக்கும் இடத்தில் 5 வீடுகள் உள்ளது. காற்றோட்டம் இல்லாத அடைப்பாக இருப்பதால் அழுத்தம் காரணமாக வெடித்து இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியானது. மருத்துவமனையில் 40 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து சாந்தி (45), ஹரிகுமார் (எ) அஜித்குமார் (27), முனுசாமி ஆகிய மூவரும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தனர். முனுசாமியின் மனைவி ராணி (70) என்பவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் தீவிபத்தில் அடுத்தடுத்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.