அரக்கோணம் அருகே தமிழக முதலமைச்சர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தாய், தந்தையரை இறந்து தவிக்கும் 50 ஆயிரம் குழந்தைகளை தேர்ந்தெடுத்து மாதந்தோறும் அவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை அளித்து தாயாகவும் தந்தையாகவும் விளங்கியவர் முதல்வர். டெல்லி பஜகாவினருக்கு ஆங்கிலம் யாருக்கும் தெரியாது, அதனால்தான் நம்மை இந்தி படிக்க வலியுறுத்துகின்றனர். தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்கள் தான் உலக அளவில் அதிக சம்பளம் பெற்று வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் படித்த பெண் தற்போது நிதி அமைச்சராக உள்ளார். ஆனால் அவர் தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என்று கூறுகிறார். இதற்காக நிர்மலாவுக்கு தமிழகத்தில் பெரும் கண்டன எதிர்ப்பு எழும். தமிழகத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பிச்சை எடுத்து வருபவர்கள் இந்தி தெரிந்தவர்களே என்று குற்றம் சாட்டினார்.
2026 தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தனி கவனம் செலுத்த வேண்டும், இல்லையென்றால் வாக்காளர் பட்டியலில் அதிகம் வடமாநிலத்தவர்களை இணைப்பதற்கும், திமுக வாக்குகளை நீக்குவதற்கும் பாஜக சதி திட்டம் செய்ய வாய்ப்புள்ளது. வாக்காளர் பட்டியலை முறையாக கவனிக்காததால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி இழந்தார். ஆகவே நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் இருப்பதால் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உள்ள திமுக வாக்குகளை பறிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு என்றும் ஏற்காது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் காலம் தழ்த்தும் ஒன்றிய அரசை சட்டரீதியாக சந்தித்து நிதியை பெறுவோம்” என்றார்.