சென்னையில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து, கல்லூரி மாணவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மின்சார ரயிலில், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ஏராளமானோர் மின்சார ரயிலைப் பயன்படுத்துகின்றனர். எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயிலில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில், இன்று காலை தாம்பரம் அருகே, காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஸ்வா என்ற கல்லூரி மாணவர் மின்சார ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் திடீரென மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, அவரை பரிசோதித்தபோது, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது தெளிவாகியது.
மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்து வந்த இவர், தினமும் மின்சார ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். ஆனால், இன்று ஏற்பட்ட இந்த சோகம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் துயரத்தில் மிதந்து, கதறி அழும் காட்சி அனைவரின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
Edited by Mahendran