தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் ஆழ் கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து விட்டு சனிக்கிழமைகளில் கரைக்கு திரும்பி வருவர். அவ்வாறு வரும் நாட்டுப்படகு மீனவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிக அளவில் கொண்டு வருவார்கள். இதனால் சனிக்கிழமைகளில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகம் காணப்படும்.
இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குறைவான நாட்டுப் படகு மீனவர்களே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு நேற்று காலையில் கரைக்கு திரும்பினர்.
இதனால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. ஆனால் மீன்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலை சற்று உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.800 வரை விற்பனையான சீலா மீன் நேற்று கிலோ ரூ.ஆயிரம் வரையும், ரூ.400க்கு விற்பனையான பாறை மீன், விளை மீன், ஊளி மீன்கள் கிலோ ரூ.600 வரையும், ரூ.400க்கு விற்ற நண்டு கிலோ ரூ.500 வரையும் விற்பனையானது.
கிழை வாளை மீன் கிலோ ரூ.150 வரையும், தட்டை கோளாமீன் கிலோ ரூ.100 வரையும் விற்பனையானது. அதுபோல் ஏற்றுமதி ரகம் வாய்ந்த மீன்களான பண்டாரி கிலோ ரூ.450 வரையும், தம்பா, மலுவா ஆகிய மீன்கள் கிலோ ரூ.350 வரையும் விற்பனையானது. மீன்களின் விலை கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்து காணப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் மீன்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.